300 ஆண்டுகளுக்கும் மேலாக லட்டு பிரசாதம் விநியோகம்: திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி லாபம்

54 0

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு, அரசர்கள் காலத்தில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், வடை,தோசை, அப்பம் போன்றவை ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

அக்கால கட்டங்களில் மாட்டு வண்டி, குதிரை வண்டிகளிலும், கால்நடையாகவும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக திருமலைக்கு வந்தனர். அவர்கள் சுமார் 3 அல்லது 4 நாட்கள் வரை அங்குள்ள தர்ம சத்திரங்களில் தங்கியிருந்து தினமும் சுவாமியை தரிசித்தனர்.

இவர்களுக்கு திருப்பதி கோயில் சார்பில் (அப்போது கோயிலை மடங்கள் பராமரித்து வந்தன) இலவசமாக உணவு வழங்கப்பட்டது. பின்னர், இவர்கள் வீடு திரும்பும்போது, வழியில் சாப்பிடுவதற்காக எலுமிச்சை, தயிர் சாதம், புளிசாதம், வடை, அப்பம் போன்றவற்றை பிரசாதமாக வழங்கினர். ஆனால், சாதம் உள்ளிட்டவற்றை கொண்டு சென்றால் அவை வழியிலேயே கெட்டு விடுவதாக பக்தர்கள் குறை கூறி உள்ளனர். ஆதலால், பூந்தியை பிரசாதமாக கொடுக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இது நாளடைவில் லட்டு பிரசாதமாக மாறி விட்டது.

புவிசார் குறியீடு: கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 1715-ம் ஆண்டு, ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு வரை தினமும் 1 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்ததால், இந்தபிரசாதம் 3.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு 2014-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

திருப்பதி கோயிலில் உள்ள மடப்பள்ளியில் லட்டு தயாரிக்கப்படுகிறது. இதனை தெலுங்கில் ‘போட்டு’ என்றழைக்கின்றனர். இங்கு பரம்பரை, பரம்பரையாக லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர்களை ’போட்டு’ ஊழியர்கள் என்று அழைக்கின்றனர்.

ஒரு ‘திட்டம்’ என்பது சுமார் 5100 லட்டு பிரசாதங்களை கொண்டதாகும். இதுவே அளவு என்பது. இது மாறாது. ஒரு திட்டத்துக்கு,803 கிலோ மளிகை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. 180 கிலோ கடலை மாவு, 165 கிலோ பசு நெய், 400 கிலோ சர்க்கரை, 300 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கற்கண்டு, 4 கிலோ ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

இந்த லட்டு தயாரிப்பில் வைஷ்ணவ பிராமணர்களே பங்கேற்பார்கள். ஆகம விதிகளின்படி, இந்த லட்டு தயாரிக்கப்படும். முன் காலத்தில் கட்டை அடுப்பில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டது. தற்போது அதிநவீனமான முறையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. மிக சிறிய அளவிலான லட்டு, பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்த பிறகு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சாதாரண லட்டு, ரூ.50 வீதம் லட்டு விநியோக மையத்தில் வழங்கப்படுகிறது. இது 175 கிராம் எடை கொண்டதாகும். கல்யாண உற்சவ லட்டு என்பது சிறிய பந்து வடிவில் இருக்கும். இது ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுவாமியை தரிசிக்க குடியரசுத் தலைவரோ அல்லது பிரதமரோ வந்தால், அவர்களுக்கு பிரத்யேகமாக 750 கிராம் எடையில் சிறப்புலட்டு பிரசாதம் தயாரித்து வழங்கப்படுகிறது. லட்டு பிரசாதம் விற்பனை செய்வதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை லாபம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.