அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷியா சதி

700 0

201607270922274044_Russians-possibly-trying-to-sway-US-polls-Obama-on-DNC-hack_SECVPFஅமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்க இணைய ஊடுருவல் உள்ளிட்ட திரைமறைவு சதியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் ஆளும்கட்சியாக உள்ள ஜனநாயக கட்சியின் தேசிய செயற்குழுவை சேர்ந்த தலைவர்களின் இமெயில்களை ரஷியாவை சேர்ந்த இணையதள ஊடுருவலாளர்கள் (ஹேக்கர்கள்) உளவுபார்த்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்படும் வேளையில் வெளியான இந்த தகவல் அமெரிக்க மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறியதாவது:-

நமது அரசின் கம்ப்யூட்டர்களை மட்டுமல்ல, தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்குள்ளும் ரஷியாவை சேர்ந்தவர்கள் ஊடுருவி உளவுபார்த்து வருகின்றனர் என்பது நமக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இப்படி ஒற்றறிந்து கசியும் தகவல்களை எல்லாம் அவர்கள் சேகரிக்கும் நோக்கம் என்னவென்று நான் நேரடியாக கூற இயலாது.

ஆனால், எனக்கு தெரிந்தவரையில் நமது குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் புதினைப்பற்றி
அடிக்கடி மிக உயர்வாக பேசி வருகிறார். இதன் அடிப்படையில் டிரம்ப்புக்கு ரஷியாவில் ஏகப்பட்ட ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷியா சதி செய்கிறதா? என்ற உங்களின் (நிருபரின்) கேள்விக்கு ‘எதுவும் சாத்தியமே’ என்றுதான் நான் கூற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.