முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான உத்திக்க பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மகாநாமவுக்கு சொந்தமான 03 வாகனங்கள் மற்றும் 02 காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால் நேற்று (18) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான சஞ்சீவ மகாநாம பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 05 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

