வெனிசூலா நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் பலி

232 0

வெனிசூலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் 3 பேர் பலியானார்கள்.

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் பண வீக்கம் வரலாறு காணாத அளவுக்கு 700 சதவீதத்தை எட்டக் கூடும் என்று சர்வதேச நிதியம் ஐ.எம்.எப். கூறி உள்ளது.

இந்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அங்கு அதிபர் தேர்தல் நடத்த வேண்டும்; சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பேரணிகளும் நடத்தப்படுகின்றன. இந்த போராட்டங்களின்போது தலைநகர் கராக்கசில் ஒரு வாலிபரும், கொலம்பியா எல்லையில் உள்ள சான் கிறிஸ்டோபலில் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கராக்கசுக்கு தெற்கே தேசிய பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.ஆனால் போலீசாரை எதிர்க்கட்சியினர் தாக்குவதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். கடைகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் அவர் கூறி உள்ளார். இந்த சம்பவங்களில் 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நிக்கோலஸ் மதுரோ எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்து வருவது, அந்த நாட்டில் மிகுந்த பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.