விமான நிலையத்திலிருந்து தப்பிய பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் கைது

115 0
சைப்ரஸ் நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பத்து இளைஞர், யுவதிகளிடம் இருந்து 60 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டு  கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் களுகம பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சைப்ரஸ் நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பத்து இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

இந்த இளைஞர் யுவதிகளுக்கான விமானம் இன்று (13) காலை 10.30 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், சந்தேக நபர் காலை 08.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று இளைஞர் யுவதிகளிடம் இருந்த அனைத்து விமானப் பயணச் சீட்டுகள் மற்றும்  விசாக்களை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தின் பின் வாயில் வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சைப்ரஸ் நாட்டுக்கு  வேலைக்கு அனுப்புவதாக கூறி மேலும் 15 பேரிடம் இருந்து பணம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜாஎல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.