புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

82 0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 15ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் ​போதே அவர் இத​னைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், நேற்று (12) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்கள் நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

மேலும், விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 7 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், மஹரகம வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் அங்கிருந்து பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகளைக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் முதலில் வழங்கப்படும். இது காலை 9.30 முதல் 10.45 வரை நடைபெறும். அதன் பின் முதலாம் பகுதி வினாத்தாள் காலை 11.15 மணிக்கு ஆரம்பமாகி ஒரு மணிநேரம் இடம்பெறும்.

மாணவர்கள் பேனா பயன்படுத்துவார்களாயின் கருப்பு அல்லது நீல பேனாவையே பயன்படுத்த முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வேறு வண்ண பேனாக்களை பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால், பென்சிலால் எழுதினால் அதற்கு எந்தத் தடையும் இல்லை.

மேலும், அழிப்பான், அடிமட்டம், தண்ணீர் போத்தல் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் எனவும் கோப்பு அட்டைகள் மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களுக்கு அனுமதியில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.