ஒக்டோபர் முதல் 35 நாடுகளுக்கு கட்டணமின்றி சுற்றுலா வீசா

104 0

கட்டணமின்றி சுற்றுலா வீசா வழங்குவதற்கு ஏனைய நாடுகள் கடைபிடிக்கின்ற முறைமைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு 35 நாடுகளுக்கு கட்டணமின்றி சுற்றுலா வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்டணமின்றி சுற்றுலா வீசா வழங்குவதற்கு ஏற்புடைய ஏனைய நாடுகளால் கடைப்பிடிக்கப்படுகின்ற முறைகள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக விசேட நிபுணத்துவ குழுவை நியமிப்பதற்காக கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள நிபுணத்துவக் குழுவானது, இலங்கையுடன் சுற்றுலாத்துறையில் போட்டித்தன்மையுடன் செயலாற்றுகின்ற 8 நாடுகள் பற்றிய விடயங்களை ஆராய்ந்து விபரங்களுடன் கூடிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் குறித்த அறிக்கை அமைச்சரவையின் கவனத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணத்துவக் குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்காகவும், அந்த விதந்துரைகளின் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 6 மாதங்களுக்கு அடையாளம்  காணப்பட்டுள்ள உயர்ந்தபட்சம் 35 நாடுகளுக்கு, 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் கட்டணமின்றி சுற்றுலா வீசா வழங்குவதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

பிரித்தானியா, ஜேர்மன், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஸகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இதாலி, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கட்டார், ஓமான், பஹரைன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு இலவச வீசா வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.