பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் வெலிகடை,பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மத்தேகொடை,ராகம, கணேமுல்ல மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து, 03 தங்க ஆபரணங்கள், 02 கெமராக்கள், பலகை வெட்டும் கருவி, தலைமுடி வெட்டும் கருவி, கிரைண்டர், காலணிகள் மற்றும் 5 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

