இளம் தாய் சிந்துஜாவின் மரணம் – மன்னார் வைத்தியசாலைக்கு முன் வெடித்த போராட்டம்

133 0

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மரியராஜ் சிந்துஜா என்ற பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கோரி இன்று (13) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், குருதிப் போக்கு காரணமாகக் கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.