சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் அம்பாந்தொட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறை கைதி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைத்தியாசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் விற்பனை நிலையமொன்றில் திருட முயன்ற போது நேற்று திங்கட்கிழமை (12) பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு அம்பலாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தப்பியோடிய சிறை கைதி அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
தப்பியோடிய சிறை கைதி ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்குனுகொலபலஸ்ஸ சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்ட இந்த சிறை கைதி கடந்த 9ம் திகதி ககயீனம் அடைந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் அம்பலாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த சிறை கைதி கடந்த 11 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் போலியான பெயரில் தன்னை அடையாளப்படுத்தி தலைமறைவாக இருந்துள்ளார்.
இதனையடுத்து, இந்த சிறை கைதி அம்பலாந்தோட்டை பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்குள் நுழைந்து பணத்தை திருட முயன்ற போது கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

