முச்சக்கரவண்டி மீது கார் மோதி விபத்து – இருவர் படுகாயம்!

134 0

பிலியந்தலை பகுதியில் நேற்று (02) முச்சக்கரவண்டியும் இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் வயோதிப தம்பதியினர் படுகாயமடைந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பாடசாலை மாணவி ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 68 மற்றும் 74 வயதுடைய தம்பதியினரே படுகாயமடைந்துள்ளனர்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சைக்காக வீட்டில் இருந்து முச்சக்கரவண்டியில் கணவனும் மனைவியும் சென்று கொண்டிருந்த போது, ​​வழியில் பாடசாலைக்கு செல்வதற்காக பஸ்ஸுக்காக காத்திருந்த சிறுமியையும் ஏற்றிச் சென்றுள்ளனர்.

முச்சக்கரவண்டி பிலியந்தலை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, ​​இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தொழிற்சாலை முகாமையாளர் ஒருவர் செலுத்தி வந்த கார் வீதியின் எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்றவுடன் காயமடைந்தவர்கள் பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த வயோதிப தம்பதியினர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.