ஒன்றிணைந்து பயணிக்கும் சூழலை ஜனாதிபதியே இல்லாதொழித்தார் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

108 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் சூழலை ஜனாதிபதியே இல்லாதொழித்தார்.வேட்பாளர் விவகாரத்தில் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு கொள்கைக்கு முரணாக அவர் செயற்பட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானம் கட்சி உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் எடுக்கப்பட்டது.அந்த தீர்மானம் இனி மாற்றம் பெறாது.எமது வேட்பாளரே வெற்றி பெறுவார்.

மாறுபட்ட அரசியல் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம்.பாராளுமன்றத்தின் ஊடாக அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.இருப்பினும் அவர் எமக்கு உண்மையாக இருக்கவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு கட்சி உறுப்பினர்களுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட்டார்.

பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் சூழலை ஜனாதிபதியே இல்லாதொழித்தார்.கட்சியின் கொள்கைக்கு எதிராக ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்துள்ளவர்கள் வெகு விரைவில் மீண்டும் எம்முடன் இணைவார்கள் என்றார்.