வத்தளையில் 3 மாடி வீட்டில் பாரிய தீ : ஒருவர் உயிரிழப்பு!

126 0
வத்தளை மாடாகொடையில் உள்ள மூன்று மாடி கொண்ட  வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 90 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு  தகவல்  கிடைத்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று  பிரதேச மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்திய பின் மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில் தீக்காயங்களுடன் வயோதிபர் ஒருவர் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வயோதிபரின் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.