இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைமைப்பதவி குறித்து அக்கட்சியின் மத்தியிலேயே தீர்மானம் எடுக்க வேண்டியிருப்பதால் அத்தீர்மானம் எடுக்கப்படும் வரையில் எனது வழமையான வகிபாகம் தொடரும் என்று அக்கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பந்தனின் மறைவையடுத்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பதவிநிலையை ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் கூடிய தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய குறித்த விடயம் சம்பந்தமாக உரையாடிய தருணத்தில் தமிழரசுக் கட்சியுடன் உரையாடிவிட்டு பதிலளிப்பதாக சுமந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக்கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக செயற்படும் ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு அப்பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்ற கருத்துக்கள் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டபோது, மத்திய செயற்குழுவினை கூட்டி அதில் தீர்மானிப்பது என்று இணக்கப்பாடு எடுக்கப்பட்டது. இந்த விடயம் ரெலோ, புளொட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 14ஆம் திகதி வவுனியாவில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதும் பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, விரைவில் மத்திய செயற்குழு கூடி அதுகுறித்து இறுதியான தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
இதேநேரம், அரசியல் உயர்பீடக் கூட்டத்தின்போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் ரெலோ, புளொட் இருப்பதால் பாராளுமன்றக் குழுத் தலைமைப்பதவியை சுமந்திரன், சிறீதரன் பகிர்வதும் தொடர்பான யோசனையொன்றும் சிறீதரனால் முன்வைக்கப்பட்டது. எனினும், அந்த யோசனை பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், சம்பந்தனின் பிரதிநிதியாக குறித்த பதவிக்கான வகிபாகத்தைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன் சம்பந்தனுடன் தான் பதவிநிலையை பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

