திருகோணமலை வான் எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இலஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று(17.07.2024) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரஜ எல, கந்தளாய் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கடமை நேரத்தில் பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக 10,000 ரூபாயை கேட்டுள்ளார்.
இதன்போது, 5000 ரூபாயை கொடுத்து விட்டு மீதி தொகையை 17 ஆம் திகதி அன்று மாலை பெற்றுக்கொள்ளும் போது இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் அந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

