ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வடக்குகிழக்கு தமிழர்களை தனித்துவமான தேசமாக அங்கீகரிக்கும் தீர்வை முன்வைக்கவேண்டும்!

176 0
image
இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடும் அனைத்துவேட்பாளர்களும் வடகிழக்கில் உள்ள தமிழர்களை தனித்துமவமான தேசமாக அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் ஐக்கிய இலங்கைக்குள் குறிப்பிடத்தக்க சுயாட்சியையும்,அதிகாரப்பகிர்வையும் வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

இந்த வருடம் பிற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவேண்டியதன் அவசியத்தை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதை இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் வரவேற்கின்றது.

அடிப்படை உரிமைகள், வாக்களிப்பதற்கான உரிமைகள் உள்ளடங்கிய தங்கள் இறைமையை இலங்கை மக்கள் புத்திசாலித்தனதுடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்தவேண்டும் , என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

இதற்கு நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல், பொருளாதாரநெருக்கடிகள் குறித்து மக்களிற்கு தெரியப்படுத்துவதும், அவர்கள் அறிந்திருப்பது அவசியம்.

மேலும் அவர்கள்ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும்  கட்சிகள் வேட்பாளர்களை விமர்சன அடிப்படையில் மதிப்பிடவேண்டும்.

இது அரசமைப்புரீதியான பலகட்சி ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சமாகும்.

அனைத்து சமூகத்தினரையும் பாதித்துள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படை காரணங்கள் அரசியல்ரீதியிலானவை என்பதை இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் பொதுமக்களிற்கு நினைவுபடுத்த விரும்புகின்றது.

நாட்டை கடந்த சில வருடங்களாக பாதித்துள்ள ,பொருளாதாரத்தை பிழையான  விதத்தில் நிர்வகித்தமை,ஊழல்,பொருளாதார ரீதியில் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத திட்டங்களிற்கான செலவீனங்கள் ,போன்றவை அரசியல் அதிகாரத்தை அனுபவித்தவர்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பதற்கான உரிய ஏற்பாடுகள் இல்லாதமையினால் ஏற்பட்ட விளைவுகளே.

வலுவான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என  இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றது. ஒரு தனிநபர், பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிஈ, தனிநபருக்கு, அப்பால் பாரிய அளவு அதிகாரம் தனிநபரிடம் குவிந்துள்ளமை அரசியலமைப்பு வாதம்,ஜனநாயக நியமங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது.

வல்லமைக்கு மேலான ஜனாதிபதிமுறை ஏனைய ஜனநாயக ஸ்தாபனங்களை செயல்இழக்கச்செய்கின்றது.

கடந்தகாலங்களின் தொடர்ச்சியான ஜனாதிபதி தேர்தல்களில,; அனேக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதியளிப்பதையும்,ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர்இலகுவாக மறந்துவிடுவதையும் நாங்கள் அவதானித்துள்ளோம்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது குறித்து அனைத்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களும் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும்,பின்னர் அதிலிருந்து பின்வாங்காமல் நடைமுறைப்படுத்தவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற மிக முக்கியமான விடயங்கள் குறித்த தங்கள் நிலைப்பாட்டினை கொள்கைகளை வெளியிடவேண்டியது அனைத்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிற்கும் முக்கியமான விடயமாகும்.

பொருளாதார நெருக்கடி , சட்டத்தின் ஆட்சி,போன்ற விடயங்கள் குறித்த தங்கள் நிலைப்பாட்டினை அவர்கள் முன்வைக்கவேண்டும்.

வடக்குகிழக்கு தமிழ்மக்களின் நியாயபூர்வமான பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாத நிலையில் இலங்கையின் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் காணப்பட்டமையே யுத்தத்திற்கும்,நாட்டின் இனக்குழுக்கள் மத்தியில் ஏற்பட்ட துருவயமப்படுத்தலிற்கும் காரணம் என்பதை இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் பல வருடங்களாக தெரிவித்துவந்துள்ளது.

வடக்குகிழக்கு தமிழ்மக்களின் அரசியல்ரீதியிலான பிரச்சினைகள், அவர்கள் எதிர்கொண்ட பாரபட்சங்கள் ,ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை பிரச்சினைகளிற்கு தீர்வை காணக்கூடிய அரசியல்தீர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுடியும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் உறுதியாக நம்புகின்றது.

அரசியல் தீர்வு என்பது ஐக்கியமான தேசம் என்ற கட்டமைப்பிற்குள் ,  வடக்குகிழக்கை ஒரு தேசமாக கருதுவதுடன் ,குறிப்பிடத்தக்க சுயாட்சி, வடக்குகிழக்கிற்கான அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படவேண்டும்.

மலையகமக்களின்நியாயபூர்வமான அபிலாசைகளிற்கும் தீர்வை காண்பது அவசியம்.அவர்கள் பல தசாப்தங்களாக கௌரவமும் ஏனைய மனித உரிமைகளும் பறிக்கப்பட்ட சமூகமாக காணப்படுகின்றனர்.

இனமோதல் மற்றும்யுத்தத்தின் விளைவுகளிற்கு பதிலளிப்பதற்கான நியாயபூர்வமான முயற்சிகள் இடம்பெறவேண்டும்.பலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை, அரசியல் கைதிகளிற்கான நீதி,படுகொலைகள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளுதல்,பாலியல் வன்முறைகள் ஏனைய  பாரிய யுத்தகால அநீதிகள்.போன்றவை இனமோதல் மற்றும் யுத்தத்தின் விளைவுகள்.

மேலும் இது படையினராலும் பல அரச நிறுவனங்களாலும முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகள் , யுத்தத்தினால் உயிரிழந்தவர்கைள நினைவுகூருவதை தடுத்தல், குழப்புதல் , கட்டுப்படுத்தல் , அச்சுறுத்தல் மற்றும் மாற்றுக்கருத்தினை ஒடுக்குதல் ,போன்றவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

ஆகவே நீண்டகாலமாக நீடிக்கும் இனமோதலிற்கு – யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களான பின்னரும் தீர்வு காணப்படாமலிருக்கும் இனமோதலிற்கு தீர்வை காண்பதற்கு நிரந்தரமான முடிவை காண்பதற்கான தங்கள் கொள்கைகளை அனைத்து வேட்பாளர்களும் தெளிவாக முன்வைக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்