ராஜபக்ஷர்களை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது.முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு ஆதரவாகவே நான் செயற்பட்டுள்ளேன். பொதுஜன பெரமுனவின் ஆதரவினால் தான் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டது. நாட்டுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்முடன் கைகோர்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கட்சி உறுப்புரிமையை மீண்டும் அவருக்கு வழங்குவேன். மக்கள் விடுதலை முன்னணி எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.
பாடசாலைகளுக்கு பேரூந்து வழங்க நிதி எவ்வாறு கிடைத்தது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டால் ஊழலுக்கு எதிராக செயற்பட அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட தயார் எனவும் ஜனாதிபதி நிபந்தனை விதித்தார்.
கண்டி நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம் என்ற தொனிப்பொருளிளான அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதால் மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடையவர்களுடன் ஒன்றிணைந்துள்ளோம். அரசியல் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நாடு அதள பாதாளத்துக்குள் விழும் போது கட்சி பேதமின்றி நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
1963 ஆம் ஆண்டு இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினரது குடியுரிமை பிரச்சினையின் போது அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும்,டட்லி சேனாநாயக்கவும் ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என்று இவர்கள் முரண்பட்டுக் கொள்ளவில்லை.குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பது பிரதான இலக்காக காணப்பட்டது.
1971 ஆம் ஆண்டு கலவரத்தின் போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தன அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் கலவரத்தை அடக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்று குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்கர்களுக்கும்,ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அரசியல் கொள்கை வேறுபாடுகள் காணப்பட்டது.இருப்பினும் தீர்மானமிக்க தருணங்களில் நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளனர்.
அதிகாரத்தை வழங்கும் போது அதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன எமக்கு கற்பித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அவ்வாறே பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழலின் போது எனக்கு அதிகாரம் கிடைத்தது.நான் அதனை பெற்றுக் கொண்டு நாட்டை பாதுகாத்தேன்.
நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்ட போது அரசாங்கத்தை பொறுப்பேற்கையில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச,ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோரை நினைத்துக் கொண்டு சவால்களை பொறுப்பேற்றேன்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் எதனையும் செய்திருக்க முடியாது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டும்.அதேபோல் ஏனைய அரசியல் கட்சியினரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு பலமுறை ஆலோசனை வழங்கினேன்.எனது ஆலோசனைக்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
அரசியல் நெருக்கடியின் பின்னர் பொதுஜன பெரமுன பிளவடைந்தது.கட்சியின் ஒரு தரப்பினர் கட்சியின் அரசரான மஹிந்த ராஜபக்ஷவை பழித்து விட்டு வெளியேறினார்கள்.பெரும்பாலானோர் அரசருடன் இருந்து விட்டார்கள்.
அரசர் மோசமானவர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் தான் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளார்கள்.ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் சென்றுள்ள ஜீ.எல்.பீரிஸ் ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ நல்லவர்,சிறந்தவர் என்று மேளம் அடித்தார்.ஒருபோதும் தவறு என்று இவர் குறிப்பிடவில்லை.இன்று விமர்சிக்கிறார்.
ராஜபக்ஷர்களை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. நான் ரணசிங்க பிரேமதாசவை தவிர்த்து எந்த ஜனாதிபதிகளையும் பாதுகாக்கவில்லை.ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக கட்சியில் குற்றப்பிரேரணை கொண்டு வரப்பட்ட போது நானே முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.ஆகவே ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை பாதுகாக்க எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.
பாரிய நெருக்கடியில் இருந்து நாட்டை பாதுகாத்து விட்டேன்.ஊழலுக்கு எதிராக நான் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுகின்றனர்.பாடசலைகளுக்கு பேரூந்து வழங்குவதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்று குறிப்பிட்டால் ஊழலுக்கு எதிராக செயற்பட அவர்களுடன் நான் ஒன்றிணைய தயார்.
நாட்டுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்முடன் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இணைந்துக் கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கட்சியின் உறுப்புரிமையை மீண்டும் வழங்குவேன். நான் நாட்டை பொறுப்பேற்கும் போது நாட்டில் ஏதும் இருக்கவில்லை.தற்போது எரிபொருள் தாராளமாக கிடைக்கிறது.இவர் இதனை கொண்டு பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாடு என்ற ரீதியில் முன்னேற வேண்டும்.குறுகிய அரசியல் இலாபத்துக்காக தற்போதைய மறுசீரமைப்புக்களை மாற்றியமைத்தால் இலக்குகள் இடைநிறுத்தப்படும்.மீண்டும் வங்குரோத்து நிலையடைய நேரிடும்.மீண்டும் வீழ்ந்தால் எவரும் ஆதரவு வழங்கமாட்டார்கள்.
ஆகவே நாட்டுக்காக ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னணியினர் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.ஐக்கிய தேசியக் கட்சியினர் இதனை எதிர்;கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் குறிப்பிட வேண்டும் என்றார்.

