சுவிசில் உணர்வுéர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் 2024

143 0

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது மாவீரர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த 30.06.2024 ஞாயிறு லுசேர்ண் மாநிலத்தில் மானிலத்தில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.

தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் காலை எட்டு மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.

விளையாட்டினூடாக தாயகம் நோக்கிய தேடலை இளையோர்களிடம் கடத்தவும் எமது மாவீரர்களின் தியாகங்களை தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்குடனும் நடத்தப்பட்டு வருகின்ற மேற்படி சுற்றுப்போட்டியில் பல நூற்றுக்கணக்கில் வீரர்களும்,பார்வையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்

முப்பத்திமூன்றாவது தடவையாக நடத்தப்பட்ட வளர்ந்தோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுடன் இளையோர் உதைபந்தாட்டம் மற்றும் பெண்கள் உதைபந்தாட்டமும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இம்முறை சிறப்பம்சமாக வளர்ந்தோருக்கான அனைத்து ஆட்டங்களும் இளையோர் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான இறுதியாட்டமும் நேரஞ்சல் செய்யப்பட்டது. வளர்ந்தோர் பிரிவில் 94,95,96,97 என நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கிய சிற்றிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் 26 வருடங்களின் பின் மீண்டும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இறுதியாக வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் தேசியசெயற்பாட்டாளர்கள்,இனஉணர்வாளர்கள்,தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணியின் வீராங்கனைகள் மற்றும் ஊடகத்துறை பணியாளரினால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இறுதியாக தேசியக்கொடி இறக்கப்பட்டு எமது தாரக மந்திரத்துடன் சுற்றுப்போட்டி இனிதே நிறைவடைந்தது.

தமிழீழ விளையாட்டுத்துறை
சுவிஸ் கிளை
30.06.2024