புத்தளத்தில் மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானை பலி

111 0

புத்தளம் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொஹம்பகஸ்வெவ பகுதியில் கொம்பன் யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.

இன்று (29) காலை மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் கொம்பன் யானையொன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

 

இந்த யானை தனியார் காணியொன்றிலேயே உயிரிழந்துள்ளது.

வீட்டிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று, யானைக்காக இடப்பட்ட தடுப்புவேலியில் இணைத்தமையினாலேயே இந்த கொம்பன் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானை சுமார் 8 அடி உயரமுடையது எனவும் 30 வயது மதிக்கத்தக்கது எனவும்  திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதன்போது தனியார் காணி உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, ஆனமடுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த யானைக்கு நிக்கவெரெட்டிய மிருக வைத்தியர் இசுருவினால் உடற்கூற்று பரிசோதனை நடத்தப்படவுள்ளது.