கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை வழக்கு

129 0

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர் பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “ஏற்கெனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கை தயாராக உள்ளது. அந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வரவுள்ளது” என்றார்.

மனுதாரரான வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, “கள்ளக் குறிச்சியில் நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியிலேயே கள்ளச் சாராயம் விற்கப்பட்டு வருகிறது. முதலில் விஷம் கலந்த சாராயம்குடித்தவர்கள் இறந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் தவறான அறிவிப்பால், கூடுதல் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இதில் காவல் துறை உயர் அதிகாரி களுக்கும் தொடர்பு உள்ளது” என்றார். அதையடுத்து நீதிபதிகள், “இதுதொடர்பாக அதிமுக தொடர்ந்துள்ள வழக்குடன், இந்த வழக்கும் சேர்த்து நாளை (இன்று) விசாரிக்கப்படும்” என்று தெரிவித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.