நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக இருந்தால் அதுதொடர்பான அறிவிப்பை சர்வதேச தர நிர்ணய நிறுவனங்களே அறிவிப்பு செய்ய வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதியோ வேறு அமைச்சர்கள் யாரும் அறிவிப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்தி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
அரசாங்கம் வெளியிட இருக்கும் மகிழ்ச்சியான தகவல் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வங்குரோத்து நிலையில் இருக்கும் எமது நாடு மீண்டும் அந்த நிலையில் இருந்து மீள்வதற்கு வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மிக முக்கியமாகும்.
ஆனால் அரசாங்கம் இதுவரை வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் மிகவும் குறுகிய அளவிலேயே கடன் மறுசீரமைப்புக்கு சென்றுள்ளது.
அதனை அடிப்படையாகக்கொண்டே தற்போது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளது என்ற தகவலை வெளியிட அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
வங்குரோத்து அடைந்த நாடுகள் பல மீண்டும் வங்குரோத்து நிலையில் இருந்து மீளும்போது, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. ஆனால் அவ்வாறானதொரு நிலைமை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் இடம்பெறவில்லை.
அவ்வாறான நிலையில் எப்படி நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளது என தெரிவிக்க முடியும். நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு நாங்களும் விருப்பம். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம். ஆனால் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைக்கு இடமளிக்க முடியாது.
மேலும், எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஆய்வு செய்த சர்வதேச தர நிர்ணய நிறுவனங்களே எமது நாடு வங்குரோத்து என்ற அறிவிப்பை வெளியிட்டது.
அப்படியானால் தற்போது எமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக இருந்தால், அந்த அறிவிப்பை தர நிர்ணய நிறுவனங்களே அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அதில் உண்மைத் தன்மை ஏற்படுகிறது.
அவ்வாறு இல்லாமல் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக ஜனாதிபதியோ வேறு அமைச்சர்கள் யாரும் தெரிவிப்பதை நம்ப முடியாது.
எனவே நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஏமாந்தது போன்று மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிடன் ஏமாறுவார்கள் என நாங்கள் நினைக்க மாட்டோம் என்றார்.

