கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி அதிகரிப்பு: சிகிச்சைக்காக வீடு வீடாக சோதனை

150 0
 தமிழ்நாட்டில்கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இன்று காலை வரை 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்,

அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.இதனிடையே புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்ட எம்.எஸ்.பிரசாந்த் நேற்று இரவு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை மருத்துவமனை மற்றும் கள்ளச்சராயம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் கருணாபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் பேட்டியளித்த புதிய ஆட்சியர் பிரசாந்த், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை துரிதமாக பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க திருச்சி, சேலம் மருத்துவமனைகளில் இருந்து கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு சிறுநீரக பாதிப்பு என உள் உறுப்பு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அந்தந்த துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பதற்றத்தைத் தணிக்க மாவட்டம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கருணாபுரம் பகுதியில் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கள்ளச் சாராயத்தை தடுக்க காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.