நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான “உறுமய” தேசிய செயற்றிட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்று முன்னர் மன்னார் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்துக்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது விவசாயிகளுக்கான கடன் திட்டம் மற்றும் காப்புறுதிக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தலைவர் காதர் மஸ்தான், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், றிசாட் பதியூதின், திலீபன், அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உட்பட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த அமர்வில் மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வு, மின் காற்றாலை அமைத்தல், மடு பெருவிழாவை முன்னிட்டு மடு வீதியிலிருந்து மடு தேவாலயம் வரை யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வீதியின் ஓரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் துப்பரவு செய்யும்போது, அதை வன இலாகா பகுதியினர் தடை செய்து தொழிலாளர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது மற்றும் விவசாயம் முதலான விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.




