கெஸ்பேவயில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்ற கொள்ளையர்

127 0
கெஸ்பேவ, பண்டாரகமை பிரதேசத்திலுள்ள பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு முன்பாக கடந் த 10 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் பெண்ணொருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண் பல்பொருள் விற்பனை நிலையத்திற்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்கு முச்சக்கரவண்டி ஒன்றுக்காக வீதியில் காத்திருந்த போதே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலியின் பெறுமதி 5 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டில் காணப்பட்ட இலக்கம் மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவரின் முகவரிக்குச் சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.