கொழும்பு மாநகர சபை பகுதியில் ஆரோக்கியமான உணவகங்கள் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான வைபவம் கொழும்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் ஜே.எம். பத்ராணி ஜெயவர்த்தனவின் தலைமையில் வியாழக்கிழமை (6) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) டாக்டர் லக்ஷ்மி சோமதுங்கவும் கலந்துகொண்டார்.
அங்கு உரையாற்றிய ஆணையாளர்,
இலங்கையில் போஷாக்கு மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் நாட்பட்ட தொற்றாத நோய்களின் பின்னணியில், ஒரே குடும்பத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகின்றன.
மேலும், வேலையின் தன்மை காரணமாக உழைக்கும் மக்களில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் செயலற்ற வாழ்க்கை முறையை நாடியுள்ளனர்.
பணியிடங்களில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவில் 2/3 பங்கை வழங்குகின்றன. முக்கியமாக, காலை உணவு மற்றும் மதிய உணவு விற்கப்படும் சிற்றுண்டிச்சாலையில் உணவுகள், ஊழியர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் காலை உணவு மற்றும் மதிய உணவு இரண்டையும் உட்கொள்வதன் மூலம் தினசரி ஊட்டச்சத்து தேவையின் கணிசமான அளவு பூர்த்தி செய்யப்படலாம்.
ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலை என்பது சுவையான, சத்தான மற்றும் வசதியான விலையில் உணவை வழங்கும் இடமாகும். மேலும், ஊழியர்கள் இந்த வகையான உணவை பழக்கப்படுத்துவதன் மூலம் வீட்டில் ஆரோக்கியமான உணவைப் பயன்படுத்த முனைகிறார்கள்.
சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவை வழங்குவது அனைத்து உணவகங்களின் பொறுப்பாகும். பாதுகாப்பான உணவு என்பது உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் பாதுகாக்கப்படும் வகையில் உணவை தயாரித்து வழங்குவதாகும்.
இது பக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளால் உணவு கெட்டுப்போவதையும் மேலும் வளர்ச்சியடைவதையும் தடுக்கிறது. சரியான உணவு தயாரிப்பது உணவு விஷத்தையும் தடுக்கிறது. எனவே, உணவகங்களில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கி, அதன் மூலம் ஊழியர்களின் சுகாதார நிலையை மேம்படுத்த வேண்டும்.
சுகாதாரமான உணவகங்களை பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் நூல்களையும் ஆணையாளர் பத்ராணி ஜெயவர்த்தன வழங்கிவைத்தார்.

