மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

102 0

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு  மத்தியில் மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் , எதிராக  59 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்,புதிய அரசாங்கத்துக்கு அதன் பொறுப்பை வழங்க வேண்டும் என கடந்த வாரம் அறிக்கை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.அத்துடன் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும்   ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு,தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் புறக்கணித்திருந்தன. அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஆகியோரும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு வியாழக்கிழமை (6) இடம்பெற்றது.

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில்  54 ஏற்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் பெரும்பாலான சரத்து விதிகள் அரசியலமைப்புக்கு முரண் என்று உயர்நீதிமன்றம்  வியாக்கியானம் வழங்கியிருந்தது.

அத்துடன் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் விதிகளை மீறும் வகையில் ஒருசில ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.ஆகவே இதனை அலட்சியப்படுத்த முடியாது.சட்டமூலத்தை முழுமையாக ஆராய்ந்து  முறையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்  .அதனால் உடனடியாக நிறைவேற்ற வேண்டாம். இரு நாள் விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

சட்டமூலம் மீதான இரு நாள் விவாதத்தை நடத்துவது கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கலாம் என சபாநாயகர் குறிப்பிட்டிருந்த நிலையில்  ஆளும் தரப்பு அதற்கு இடமளிக்கவில்லை.இதனால் நேற்று காலை முதல் சபையில் ஆளும் தரப்புக்கும், எதிர்கட்சிகளுக்குமிடையில் இது தொடர்பில் கடும் சர்ச்சை மற்றும் தர்க்கம் ஏற்பட்ட நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் இரு கோரிக்கைகளையும் நிராகரிக்கப்பட்ட நிலையில்  மின்சாரத்துறை அமைச்சர்  சட்டமூலத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

இவ்வாறான நிலையில் விவாத முடிவில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 103  வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும்  அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 44 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 162 பேர் வாக்களிப்பில் கலந்துக் கொண்டனர்.62 பேர் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.