அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும்

103 0

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை  அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நிவாரண நிதி எந்தவகையிலும் போதுமானதாக இல்லை. அதனால் நிவாரண நிதியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குறுகிய காலத்துக்குள் இந்த நிவாரண நடவடிக்கைகளை வழங்க எடுத்துவரும் முயற்சிக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அனர்த்தம் காரணமாக அதிகமானவர்களுக்கு உணவு, உடை  என அனைத்தும் இல்லாமல் போயிருக்கிறது. அதனால் இவர்களுக்காக முறையான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டும். மாவட்ட செயலகங்களுக்கு மேலதிகமாக 10இலட்சம் ரூபா அனுப்பி இருக்கிறது. ஆனால் அந்த எந்தவகையிலும் போதுமானதாக இல்லை.

சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மூலம்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆகாரம் வழங்க முடியாது. ஒரு நேர சாப்பாடு கூட வழங்க முடியாது.அதனால் குறித்த சுற்று நிருபத்தை உடனடியாக மாற்றயமைக்க வேண்டும். நிவாரணம் வழங்கும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு 400 ரூபா என்ற தொகை எந்தவகையிலும் போதாது.

அத்துடன் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் முற்றாக மாற்றப்பட வேண்டும். முறையான அனர்த்த முகாமைத்துவ நிவாரண வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றார்.