ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தினை சில கட்சிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக திரிபுபடுத்தியுள்ளன.
அவை குறிப்பிடுவதைப் போன்று ஜனாதிபதியோ, அரசாங்கமோ தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு திட்டமிடவில்லை என்று உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் 2 வருடங்கள் காலத்தை வழங்கினால் சிறந்தது என்றே பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாராளுமன்றத்துக்கு பதவி காலம் உள்ளது. ஜனாதிபதியால் கலைக்கப்படாவிட்டால் அடுத்த வருடம் வரை பாராளுமன்றம் இயங்கும்.
இவ்வாண்டு ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் அவ்வாறே கூறப்பட்டுள்ளது. அதற்கமையவே நாம் செயற்பட வேண்டும். ஜனாதிபதியும் அதனை பல சந்தர்ப்பங்களில் உறுதிபட கூறியுள்ளார்.
ஆனால் சில அரசியல் கட்சிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அவர் கூறிய விடயத்தை திரிபுபடுத்தி பெரிதாகக் காண்பிக்கின்றன. தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாகவும் அந்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
ஆனால் ஜனாதிபதியோ அரசாங்கதோ தேர்தலை நடத்தக் கூடாது என்று எண்ணவில்லை. கடந்த வரவு – செலவு திட்டத்தில் நிதி அமைச்சர் என்ற ரீதியில் அவர் ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கியுள்ளார்.
எனவே எவரும் தேர்தல் தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை நாம் தேர்தலைக் கண்டு அஞ்சவுமில்லை. அஞ்சுபவர்களே தேர்தலுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர் என்றார்.

