இந்தியாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புடைய இலங்கையர்களின் உள்நாட்டு வலையமைப்பு குறித்து விசாரணை

122 0

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளுக்கு இலங்கையில் எவ்வாறான தொடர்புகள் உள்ளன?, அவர்களது தொடர்பாடல் வலையமைப்புக்கள் எவ்வாறானவை என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எமது புலனாய்வு பிரிவினரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகள் தொடர்பில் குஜராத் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மொஹம்மட் நுஸ்ரத், மொஹம்மட் பாரிஸ், மொஹம்மட் ராசீப், மொஹம்மட் நஸ்ராத் என்ற நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்தால் தாம் சொர்க்கத்துக்குச் செல்வோம் என்று இவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி இழைப்பதாகக் குறிப்பிட்டு பாரதிய ஜனதா கட்சி மீது தாக்குதல்கள் நடத்துவதே தமது இலக்கென இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து குண்டுகளுடன் கை துப்பாக்கிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமாத்திரமின்றி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலட்சிணையுடன் கூடிய கருப்பு கொடியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 இலட்சம் ரூபாவுக்காக தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்த துணிகின்றனர் என்றால் அது எந்தளவுக்கு துரதிஷ்டவசமானது என்பதை உணர முடியும். எனவே இலங்கையிலும் இவ்வாறானவர்கள் உள்ளனரா? அவர்களது தொடர்பாடல் வலையமைப்புக்கள் எவ்வாறுள்ளன என்பதை கண்டறிவதற்காக எமது புலனாய்வு பிரிவினர் குழுவொன்றை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான தீவிரவாத, அடிப்படைவாத போக்குடையவர்களை இனங்கண்டு அவர்களை பலவந்தமாகவேனும் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.