கசினோவுக்கு அடிமையாகியவர் இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்துக் கொள்ளை !

119 0
இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்து பல கோடி ரூபா பெறுமதியான தங்க  ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியன திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ, அங்கம்பிட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியில் 6 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தினையும்  ஜா- எல, கனுவான பகுதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கியிலிருந்து 2 கோடி ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தினையும்  சந்தேகநபர் திருடியுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பிலியந்தலை மடபாத்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனவும், கசினோ விளையாட்டிற்கு அடிமையாகியுள்ள நிலையில் திருட்டு குற்றச் செயல்களில்  ஈடுபடுவதாகவும்  விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, இரண்டு வங்கிகளிலும் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் களியாட்ட விடுதிகளுக்குச் சென்று கசினோ விளையாடியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், திருடிய பணத்தில் வென்னப்புவ பகுதியிலுள்ள நபரிடமிருந்து கார் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.