திருகோணமலை – பதவிஸ்ரீபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அப்பகுதி மக்களுடைய நலனினை கருத்திற் கொண்டு அண்மையில் பிரதேச வைத்தியசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இதன் பெயர்ப் பலகையில் உள்ள தமிழ் பெயரானது தமிழ் பிழைகளோடு காணப்படுவதாகவும், அதை திருத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை அது திருத்தப்படவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் உள்ள பெரும்பாலான அரச திணைக்களங்களிலும், பெயர்ப் பலகை தயாரிக்கும் நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த பலர் இருக்கின்றபோதும், அதைவிட தமிழில் மொழி பெயர்ப்பு செய்யக்கூடிய இணையத்தள வசதிகள் இருக்கின்ற நிலையிலும் தமிழ் மொழியில் இவ்வாறான தவறுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமையானது கவலையளிப்பதாகவும், அத்துடன் முக்கியமான பெயர்பலகைகளை அச்சிட முன்னரும், அதனை காட்சிப்படுத்த முன்னரும் சரிபார்க்க ஏன் சம்பந்தப்பட்ட தரப்பினர் தவறுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே குறித்த பெயர்ப் பலகையில் உள்ள தமிழ்ப் பிழைகளை திருத்துவதோடு எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் எங்கும் இடம்பெறாத வகையில் அரசு பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

