மட்டக்களப்பில் காணிகள் குத்தகை என்ற பேரில் மோசடி

147 0

மட்டக்களப்பு   மாநகரசபைக்கு சொந்தமான காணிகள் நீண்டகால குத்தகை வழங்கல் என்ற அடிப்டையில் பாரிய மோசடி இடம்பெறுகின்றது எனவே இந்த மோசடி தொடர்பாக விசாரணை வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், “மாநகரசபைக்கு சொந்தமாக காணிகளை குத்தகைக்கு கொடுக்கின்ற விடயத்திலே மாநகரசபை ஆணையாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளனர்.

எந்தவொரு அரச காணிகளையும் வைத்துக் கொள்ளாமல் கொடுங்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் மிகத் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இப்படிப்பட்ட செயற்பாட்டின் மூலம் மறைமுகமாக மோசடி ஒன்றை நடாத்துகின்றார்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது ஆகவே இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு பரிகாரம் பெறப்பட வேண்டும்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் அதிகாரத்தை பயன்படுத்தி கதிரை ஏறிய சில அதிகாரிகள் மாவட்டத்திலுள்ள எல்லா அரச திணைக்களங்களில் தமது கடமையை சீராக செய்வதில்லை. மாறாக அவர்களுக்கு கூலிக்கு மாரடிக்கின்றவர்களாக உள்ளனர்.

கல்வியாக இருந்தாலும் சரி வேறு துறைகளாக இருந்தாலும் சரி அவரது தலையீடு இருக்கின்றது. அதேவேளை கல்வியிலே இவரின் தலையீடு கூடுதலாக இருக்கின்றது.

எனவே கல்வியை பொறுத்தமட்டில் எந்த ஒரு அரசியலும் இருக்க கூடாது அதற்குரிய வளங்கள் கொடுக்கப்பட வேண்டுமே தவிர கல்விக்குள் அரசியல் போகுமாக இருந்தால் சிறந்த கல்வியை பெறமுடியாது என்பதை மக்கள், அதிகாரிகள் உணரவேண்டும்” என்றும் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.