இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை (CWC) சரியான பாதையில் வழிநடத்தி அதற்கு மகுடம் சூடியவரே அமரர் ஆறுமுகன் தொண்டமான் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு செந்தில் தொண்டமான் விடுத்துள்ள சிரார்த்த தின செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களுக்கும் முழு மலையகத்துக்கும் பாதுகாப்பாக திகழ்ந்தவர். சமரசமின்றி மலையக மக்களிக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மகத்தான தலைவர்.
சம்பள பேச்சுவார்த்தை முதல் மக்களின் உரிமைகளை வென்றுக்கொடுப்பதில் ஆளும் அரசாங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்ததுடன், அடிப்பணியாது செயற்பட்டார்.
அவரது இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் காட்டிய வழியில் இ.தொ.கா தமது பயணத்தை தொடரும்” என கூறியுள்ளார்.

