பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தால் பண்டாரநாயக்கா குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல்கதியே ராஜபக்ஷர்களுக்கும் ஏற்படும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் பாதகமாக அமையும்.
சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பக்கம்.
ஆகவே அந்தக் கட்சியின் தலைவர் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பண்டாரநாயக்கா குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் நிலைமை தமக்கும் ஏற்படுமோ என ராஜபக்ஷர்கள் அச்சமடைகிறார்கள்.
நாட்டு மக்கள் தம் பக்கம் என்று நினைத்துக்கொண்டுள்ள பொதுஜன பெரமுனவுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தகுந்த பாடத்தை கற்பிக்கும்.
அவர்களின் வேட்பாளர் யார் என்பதை நாங்களும் எதிர்பார்த்துள்ளோம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

