ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வடக்கிற்கு விஜயம்

31 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். 3 நாட்கள் விஜயமாக வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் பயிற்சி பிரிவொன்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதார பிரிவொன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இதய நோய் பிரிவும், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிய விடுதியொன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இவை தவிர யாழ்ப்பாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

இவ்வாறு 10 முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். அது மாத்திரமின்றி வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இவ்விஜயத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் அரசியல் ரீதியான சந்திப்புக்கள் எவையும் திட்டமிடப்படவில்லை எனத் தெரியவருகிறது.