சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்

23 0

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.மகாதேவனை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எஸ்.வி. கங்காபுர்வாலா இன்றுடன் (மே 23)பணி ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து, மூத்த நீதிபதியான ஆர்.மகாதேவனை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த 1963-ம் ஆண்டு பிறந்த நீதிபதி மகாதேவன், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து, 1989-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றி, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார்.கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வரும்ஆர்.மகாதேவன், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மே 24-ம் தேதி (நாளை) முதல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க, பழமையான கோயில்கள், புராதன சின்னங்கள், கோயில் நகைகள் பாதுகாப்பு, சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கென நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு, அறநிலையத் துறைக்கும், தமிழக அரசுக்கும் 75 கட்டளைகள் உட்பட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.