அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பரிதவிப்பு!

230 0

ஐ.நா சபை உட்பட நம்பி யவர்கள் அனைவரும் கைவிட்டுள்ள நிலையில் தமது போராட்டம் பெரும் நெருக்கடிமிக்கதாக மாறியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

யுத்த சூழ்நிலையின் போது இளைஞர், யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பில் தீர்வொன்றை முன் வைக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம் நேற்று 52 ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில் ஐ.நா சபை கூட நடுநிலையாக செயற்படவில்லை என அங்கு போராடி வருகின்ற மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையுடன் கூடிய உணவுத் தவிர்ப்பு போராட்டம் நேற்றுடன் 48 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுமாத்திரமன்றி முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றுடன் முப்பத்து நான்காவது நாளை எட்டியுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலையில் இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.