சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட 15 வது ஆண்டு தமிழினவழிப்பு நினைவு நாள் 2024!

153 0

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது இம்முறை 18.05.2024 சனிக்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள கெல்விற்றியா திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கான சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பெற்ற இக் கவனயீர்ப்பு நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுக்குறியீட்டு வணக்கப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில்; வணக்கப்பாடலும் வழங்கப்பெற்றது.

சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த சூரிச் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய நாடளுமன்ற உறுப்பினர் பபியான் அவர்கள் வருகை தந்து தமிழின அழிப்பு சார்ந்து கருத்து தெரிவித்திருந்ததுடன் தான் தொடர்ந்து எமது இனத்திற்காக தொடர்ந்து சுவிஸ் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக்க் கூறினார். அத்துடன் குருதிஸ்தான் இன மக்களும் பங்கெடுத்து அவர்கள் என்றும் தமிழ் மக்களின் உரிமைப் போருக்காகத் தொடர்ந்து எம்முடன் பயணிப்பதாகவும் கூறி எமது நினைவு நாளுக்கு வலுச்சேர்த்திருந்தனர்.

மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வில் இனவழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் இளையோர்களால் விநியோகிக்கப்பட்டதுடன், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மொழிகளிலான பேச்சுக்களும் வழங்கப்பட்டதுடன் காலத்தின் தேவைகருதியதும் சமகால அரசியல் நிலவரங்களையும் உள்ளடக்கியதுமான பேச்சுக்களும், நினைவுப் பகிர்வுகளும் தமிழ்மொழியிலும் இடம்பெற்றிருந்தன.

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிநாட்களில் எமது உறவுகள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது பசியாற ஒருநேர உணவுக்கு வழியின்றி உப்பு, பால் இல்லாத கஞ்சி உட்கொண்டு பசியாறியதை நினைவுகூரும் நோக்கில் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பெற்றது. அத்துடன் கிளாறவுஸ் மாநில பூங்காவில் இருந்து இன உணர்வாளர்களினால் சூரிச் நினைவுத்திடலை நோக்கி வேற்றின மக்களுக்கு எமது துயரங்களை விழிப்புணர்வை வெளிக்கொணரும் வகையில் ஈருருளிப்பயணம் இடம்பெற்றது. அத்துடன் சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள ஆல்சட்டன் தொடரூந்து நிலையத்திலிருந்து இனஉணர்வாளர்களினால் வேற்றின மக்களுக்குத் தமிழின அழிப்பினை தெரியப்படுத்தும் நோக்கிலான நடைப்பயணமும் இடம்பெற்று நினைவுத்திடலை வந்தடைந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் தமிழினவழிப்பு சார்ந்த, தமிழினவழிப்பிற்கு நீதி கேட்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கிய சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்; தமது உணர்வுகளை ஆற்றாமையோடு வெளிப்படுத்தியதோடு நாம் அனைவரும் ஒற்றுமையாக தாயகம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து சுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் கையேற்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் வலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமை மீட்போம்! என்ற உணர்வுடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றது.