எகிப்து தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரிந்ததாக தகவல்

276 0

அலெக்சாண்ட்ரியா தேவாலயத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவந்துள்ளதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

எகிப்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, டான்டா மற்றும் அலெக்சாண்ட்ரியா ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைப்படைத்  தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து எகிப்து அதிபர் அல் சிசி, மூன்று மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுவதற்கு உயர்மட்டக் கவுன்சில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அலெக்சாண்ட்ரியா தேவாலயத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய மர்மநபர் யார் என்பது தெரியவந்துள்ளதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், டான்டா பகுதியில் தாக்குதல் நடத்திய மர்மநபர் யார் என்பது குறித்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.