கும்பகோணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் பெயர் அழிப்பு: போலீஸில் புகார்

15 0

கும்பகோணம் வட்டம் கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெயரை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஊராட்சி மன்றத் தலைவர் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த மலர்கொடி சீனிவாசன் (49). இவர், கடிச்சம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் உள்ளார். புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 2023, ஆக.10-ம் தேதி திறந்து வைத்தார். அதன் பிறகு, அந்த அலுவலகத்தின் முகப்பில் தலைவரான அவரது பெயர் பெயிண்டால் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் கட்டுப் பாடுகள் விதிமுறைக்கு வந்ததால், தலைவரான அவரது பெயர் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, பிளக்ஸ் வைத்து மறைக்கப்பட்டது.இதையடுத்து, தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததால், ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சீனிவாசன், அவரது பெயரை மறைத்துள்ள பிளக்ஸை அகற்றிய போது, அவரது பெயர் அழிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சீனிவாசன், சுவாமி மலை காவல் நிலையத்தில் நேற்று அளித்துள்ள புகாரில், “கடிச்சபாடியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பதவியில் உள்ளேன். என்னை நிர்வாகம் செய்ய விடாமல் சமூக ரீதியாகத் தடுக்கின்றனர்.

புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள எனது பெயரை பாமக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் என்.சிவபாலன் மற்றும் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.செல்வக்குமார் ஆகியோர் பெயிண்டால் அழித்துள்ளனர். இதே போல் என்னைப் பற்றி வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்கள். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.