போயிங் விண்­க­லத்தின் முதல் மனித விண்வெளிப் பயணம் இறு­தி­ நே­ரத்தில் ஒத்­தி­வைப்பு

15 0

போயிங் நிறு­வனம் தயா­ரித்த ஸ்டார்­லைனர் எனும் புதிய விண்­க­லத்தின் மூலம் மனி­தர்­களை விண்­வெ­ளிக்கு அனுப்பும் முதல் பயணமானது, ­விண்­கலம் ஏவப்­ப­டு­வ­தற்கு 2 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் ஒத்­திவைக்­கப்­பட்­டது.

அமெ­ரிக்­காவின் பச் வில்மோர் (61) மற்றும் சுனி வில்­லியம்ஸ் எனும் சுனிதா வில்­லியம்ஸ் (58) ஆகியோர் இவ்­விண்­க­லத்தின் மூலம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு பய­ணிக்­க­வி­ருந்­தனர்.

புளோ­ரிடா மாநி­லத்தின் கேப் கனா­வரால் விண்­வெளி ஏவு­த­ளத்­தி­லி­ருந்து உள்ளூர் நேரப்­படி திங்கள் இரவு 10.34 மணிக்கு (இலங்கை, இந்­திய நேரப்­படி நேற்­று­ செவ்வாய் (07) காலை 8.04 மணிக்கு) யுனைடெட் லோஞ்ச் அலை­யன்ஸின் அட்லஸ் 5 என்.22 ரக ரொக்கெட் மூலம் விண்­வெ­ளிக்கு ஏவப்­ப­ட­வி­ருந்­தது.

எனினும், விண்­வெளி வீரர்­க­ளான பச் வில்மோர், சுனி வில்­லியம்ஸ் ஆகியோர் விண்­க­லத்தில் அவர்­களின் ஆச­னங்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், இப்­ப­யணம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

ஸ்டார்­லைனர் விண்­க­லத்தை விண்­வெ­ளி­க்கு ஏவு­வ­தற்­கான அட்லஸ்-5 ரொக்கெட்டின் திரவ ஒட்­சிசன் குழாய் வால்வு ஒன்றில் சத்­த­மொன்று ஏற்­ப­டு­வதை பொறி­யி­ய­லா­ளர்கள் அவ­தா­னித்­த­தை­ய­டுத்து, இப்­ப­ய­ணத்தை ஒத்­தி­வைப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அனைத்து குறை­பா­டு­களும் நிவர்த்­தி­ செய்­யப்­பட்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால் தவிர மேற்படி பயணம் இரத்து செய்­யப்­படும் என ஏற்­கெ­னவே அதி­கா­ரிகள் அறி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அட்லஸ்-5 ரொக்­கெட்டை தயா­ரித்த யுனைடெட் லோஞ்ச் அலையன்ஸ் (யூ.எல்.ஏ) நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டொரி புரூனோ, உள்ளூர் நேரப்­படி திங்கள் நள்­ளி­ரவு நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் பேசு­கையில், வால்வு பகு­தியில் ஏற்­பட்ட தேய்வு கார­ண­மாக மேற்­படி அசா­தா­ரண அதிர்­வுகள் ஏற்­பட்­டி­ருக்­கலாம் எனக் கூறினார். எனினும், விண்­க­லத்தில் பயணம் செய்­ய­வி­ருந்­த­வர்கள் ஒரு­போதும் ஆபத்தில் இருக்­க­வில்லை எனவும் அவர் கூறினார்.

மேற்­படி தேய்வு குறித்து பொறி­யி­ய­லா­ளர்கள் ஆராய்ந்து, அதே பாகத்தை மீளப் பயன்­ப­டுத்­து­வதா அல்­லது புதிய வால்வை பொருத்­து­வ­தற்­காக ரொக்­கெட்டை தொழிற்­சா­லைக்கு எடுத்துச் செல்­வதா என்­பதை தீர்­மா­னிப்பர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முழு­மை­யான மதிப்­பீட்­டுக்கு மேல­திக நேரம் தேவைப்­படும் எனவும், இந்த விண்­கலம் மே 10ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் ஏவு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட மாட்­டாது எனவும் யூ.எல்.ஏ. நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இலோன் மஸ்­குக்கு சொந்­த­மான ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வனம் தயா­ரித்த ‘க்ரூ ட்ரகன்’ விண்­க­ல­மானது மனி­தர்­களை சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு ஏற்றிச் சென்ற முத­லா­வது தனியார் நிறு­வன விண்­க­ல­மாக உள்­ளது.

ஸ்டார்­லைனர் விண்­கல சோதனை வெற்­றி­ய­டைந்தால், சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு மனி­தர்கள் பய­ணிக்­கக்­கூ­டிய இரண்­டா­வது விண்­க­ல­மாக அதற்கு நாசா நிறு­வனம் சான்­ற­ளிக்கும்.

பச் வில்மோர், சுனி வில்­லியம்ஸ் இரு­வரும் அமெ­ரிக்க கடற்­ப­டை­யினால் பயிற்­று­விக்­கப்­பட்ட விமா­னி­க­ளாவர். நாசா விண்­வெளி வீரர்­க­ளான இவர்கள் இரு­வரும் தலா இரு தட­வைகள் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்று திரும்­பி­யுள்­ளனர். ஒரு தடவை நாசாவின் ‘ஷட்டில்’ விண்­கலம் மூலமும் மற்­றொரு தடவை ரஷ்­யாவின் சோயுஸ் விண்­கலம் மூலமும் அவர்கள் இப்­ப­ய­ணங்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

ஸ்டார்­லைனர் விண்­கலம் மூல­மான பய­ணத்தில் அதன் செயற்­பாட்டு ஆற்­றல்­களை இவர்கள் பரி­சோ­திக்­க­வுள்­ளனர்.

ஏற்­கெ­னவே போயிங் ஸ்டார்­லைனர் விண்­க­லத்தின் மனி­தர்கள் அற்ற முதல் பய­ணமும் பல வரு­ட­கால தாம­தத்தின் பின்­னரே 2019ஆம் ஆண்டு நிறை­வே­றி­யது.

பிர­சித்தி பெற்ற விமான தயா­ரிப்பு நிறு­வ­னங்­களில் ஒன்­றான போயிங், தனது 737 மெக்ஸ் ரக விமா­னங்­களின் கோளா­றுகள் தொடர்­பாக கடந்த சில வரு­டங்­க­ளாக சர்ச்­சை­களை எதிர்­கொண்­டி­ருந்­தது.

ஸ்டார் லைனர் விண்­க­லத்தின் மூலம் மனி­தர்­களை சர்­வ­தேச விண்­வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டம் வெற்றியடைந்தால் அது போயிங் நிறுவனத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.

மனித விண்வெளிப் பயணங்களுக்கான விண்கலங்களை தயாரிப்பதற்கு 2014ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்துடன் நாசா நிறுவனம் 4.2 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை செய்துகொண்டிருந்தது. அதேவேளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா 2.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை செய்திருந்தது.