தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளராக ரி.பாரதிதாசன் நியமனம்

125 0

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் பதவியான பொது முகாமையாளர் பதவிக்கு மிக நீண்ட காலத்துக்கு பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரி. பாரதிதாசன் என்பவரே தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறியியல் துறையில் இரண்டு முதுமானிப் பட்டங்கள் உட்பட மூன்று முதுமானி பட்டங்களை பெற்றுள்ள இவர், 1992ஆம் ஆண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் பொறியியலாளராக பணியில் இணைந்துகொண்டார்.

ரி.பாரதிதாசன் பதில் முகாமையாளர், மாவட்ட முகாமையாளர், பிராந்திய முகாமையாளர், வடக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் மற்றும் சமூக அடிப்படையிலான கிராமிய குடிநீர் வழங்கல் திட்டம், யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர் விநியோகம் சுகாதார மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் திட்டப் பணிப்பாளர், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் திட்டப் பணிப்பாளர் என பல பதவிகளை வகித்தார். இறுதியாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மற்றும் வட மத்திய மாகாண உதவி பொது முகாமையாளராகவும் பணியாற்றியிருந்தார்.

இறுதி யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் மெனிக்பாம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த காலத்தில் குறைந்தளவிலான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை கொண்டு அனைத்து மக்களுக்குமான நீர் வழங்கல் நடவடிக்கையினை சிறப்பாக மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.