டிக்கோயா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு முகங்கொடுப்போர் பெரும் பாதிப்பு

113 0

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக  மயக்க மருந்து நிபுணர் (Anesthesiologist) இல்லாத காரணங்களினால்  சத்திர சிகிச்சைக்கு முகங்கொடுக்கவுள்ளோர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். ஏற்கனவே பணியில் இருந்த இருவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர்களுக்குப்பதிலாக இதுவரை வேறு எவரும் நியமிக்கப்படவில்லையென்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சத்திர சிகிச்சைக்கு முகங்கொடுக்கவுள்ள நூற்றுக்கணக்கானவர்களுக்கு திகதியொன்றை வழங்க முடியாது வைத்தியசாலை நிர்வாகம் தடுமாறி வருகின்றது.

பலர் தமக்கு வழங்கப்பட்ட திகதியன்று வைத்தியசாலைக்குச் சென்று மாலை வரை காத்திருந்து விட்டு திரும்புகின்றனர்.

குறிப்பிட்ட காலத்தில் வைத்தியர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதால் இந்த பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இது குறித்து மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நிஹாலிடம் கேட்ட போது, டிக்கோயா ஆதார வைத்தியசாலை மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இப்பிரச்சினைகள் நிலவுவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து சுகாதார அமைச்சுக்கு பத்து கடிதங்கள் வரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த மயக்க மருந்து நிபுணர்கள் இல்லாவிடின் எவ்வாறு தீர்வு காண்பது எனக் கேள்வி எழுப்புகிறார்.

இதேவேளை, நுவரெலியா பொது வைத்தியசாலை மற்றும் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைகளில் குறித்த வைத்திய நிபுணர்கள் இருப்பதால் மிக அவசரமாக சத்திர சிகிச்சைக்கு முகங்கொடுக்க இருப்பவர்களை அங்கு அனுப்பியாவது சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.