சர்வதேச பிணைமுறி உரித்தாளர்களுடன் வெகுவிரைவில் கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடு

19 0

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச பிணைமுறி உரித்தாளர்கள் குழுவினருடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளில் வெகுவிரைவில் இணக்கப்பாடு எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கும், சர்வதேச பிணைமுறி உரித்தாளர்கள் மற்றும் அவர்களது ஆலோசகர்களுக்கும் இடையேயான கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் அண்மையில் லண்டனில் நடைபெற்றன.

இதன்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்றங்களுடன் தொடர்புடைய பிணைமுறிகளை மறுசீரமைப்பது குறித்து பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் பிணைமுறி உரித்தாளர்களும் தீர்மானமொன்றுக்கு வருவதற்கு காத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘இறுதிக்கட்ட இணக்கப்பாடொன்றை எட்டுவதில் அவர்கள் ஆர்வம் காண்பித்துள்ளனர். இவ்விடயத்தில் சில காரணிகள் தொடர்பில் கலந்துரையாடவேண்டியுள்ளது. சர்வதேச பிணைமுறி உரித்தாளர்களுடனான இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு உதவும் என நாம் நம்புகின்றோம்’ எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாட்டை எட்டுவதை முன்னிறுத்தி தாம் பணியாற்றிவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.