யாழில் மாடுகளை சித்திரவதைக்கு உள்ளாக்கும் விதமாக லொறியில் ஏற்றிச் சென்றவர் கைது

16 0

சித்திரவதைக்கு உட்படுத்தும் விதமாக மாடுகளை லொறியில் ஏற்றிச் சென்ற சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், 10 மாடுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

அந்த நபர் நெடுந்தீவு பகுதியில் இருந்து 20 மாடுகளை படகு மூலம் குறிகட்டுவான் இறங்குதுறைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து லொறியில் 20 மாடுகளையும் யாழ்ப்பாணம் நோக்கி ஏற்றிச் சென்றுள்ளார்.

அதில் 10 மாடுகளை பண்ணை பகுதியில் இறக்கி, அவற்றை விற்பனை செய்த பின்னர் மிகுதி 10 மாடுகளையும் லொறியில் ஏற்றிச் சென்றவேளை யாழ்ப்பாண பொலிஸாரினால் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், லொறியில் இருந்த 10 மாடுகள் மற்றும் லொறியினை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்ற பொலிஸார், கைது செய்யப்பட்ட சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

லொறி ஒன்றில் 05 மாடுகளை மாத்திரமே ஏற்றி செல்ல முடியும் எனவும், அவற்றுக்கு மேலதிகமாக மாடுகளை ஏற்றி்ச் சென்றமையால் விலங்குகளை சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.