வடமேல் ஆளுநர் ஏறாவூர் முதலீட்டு வலயத்தின் அபிவிருத்திப் பணிகளை இந்திய முதலீட்டாளர்களுடன் நேரில் சென்று பரிசீலனை!

13 0

மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையோரமாக அமையவிருக்கும் ஆடை தொழில் முதலீட்டு வலய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் இந்திய முதலீட்டாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.

சனிக்கிழமை (04) கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு விமானம் மூலம் சென்ற வடமேல் மாகாண ஆளுநரும் இந்திய முதலீட்டாளர் குழுவினரும் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் முதலீட்டு வலயத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்தனர்.

ஏறாவூரில் ஆடை கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கு கடந்த 26.10.2020 அன்று அமைச்சரவை தீர்மானம் எட்டப்பட்டதற்கு அமைவாக புன்னைக்குடா கடற்கரையோரப் பகுதியில் ஆடை கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கான அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இது கிழக்கு மாகாணத்தில் துணி உற்பத்தி தொடர்பான தொழில் முயற்சிக்கென அமையவிருக்கும் விசே‪ட, பிரமாண்ட கைத்தொழில் வலயமாகும்.

இந்த ஆடை கைத்தொழில் முதலீட்டு வலயம் இயங்கத் தொடங்குமாயின் அங்கு பல்வேறு தொழில் தரங்களில் சுமார் ஈராயிரம் பேர் நேரடியாகவும் சுமார் அதே எண்ணிக்கையிலானோர் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலீட்டு வலயத்துக்கென சிபாரிசு செய்யப்பட்ட 400 ஏக்கர் காணிகளில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு உரித்தான 275 ஏக்கர் காணிகள் ஏற்கெனவே இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்டு அங்கு மின்சாரம், நீர் விநியோகம், வீதிகள், தொலைத் தொடர்பு உள்ளிட்ட உட்கட்டமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி முடக்கம் காரணமாக இந்த முதலீட்டு வலயத்துக்கான அபிவிருத்திப் பணிகள் தாமதமாகியிருக்கின்ற போதிலும் வெகுவிரைவில் துரித கதியில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு முதலீட்டு வலயம் செயற்படத் தொங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆளுநருடன் வந்த இந்திய ஆடை உற்பத்தி முதலீட்டாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் பாரிய ஆடை தொழிற்சாலைகளை நிர்மாணிக்க தாம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர்.

அதன் மூலம் வறிய நிலையிலுள்ள பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பைப் பெறுவர் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டுடன் வருகைதந்த இந்திய முதலீட்டாளர்கள் குழுவில் தமிழ்நாட்டின் முன்னோடி ஆடை உற்பத்தி நிறுவனமான எஸ்.பி.அப்பரல்ஸ் லிமிட்டெட்டின் நிர்வாகப் பணிப்பாளர் பி.சுந்தர்ராஜன், பிரதம நிறைவேற்று அதிகாரி பி.வி.ஜீவா, தலைமை கணக்காளர் வி.பாலாஜி, எஸ்.பி.யூகே நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி பிரசங்க ஹேவாபத்திரன ஆகியோர் இணைந்திருந்தனர்.