மா.க. ஈழவேந்தன் அவர்கள் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு.

170 0

4.5.2024

கனகசபாபதி ஈழவேந்தன் அவர்களிற்கு
“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் மா.க. ஈழவேந்தன் என்கின்ற மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன் அவர்கள், 28.04.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும் அவரது கொள்கைகளையும் நெஞ்சில் வரித்து, தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நெஞ்சுறுதியுடனும் நேர்மையுடனும் செயலாற்றியவராவார்.

சிறிலங்கா அரசினால் சிங்களம் மட்டும் அரசகருமமொழி எனும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, பகிரங்கமாகவே அதனை எதிர்த்துப்போராடியிருந்தார். இதன் அதியுச்சமாகத் தனது அரசபணியைத் தூக்கியெறிந்து இனப்பற்றை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்தில், எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தியிருந்தார். அக்காலப்பகுதியில், சிங்கள அரசினாலும் அதன் ஆக்கிரமிப்புப்படைகளாலும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்பை, ஊடகங்கள் ஊடாகவும் மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். எமது விடுதலை இயக்கத்திற்கு மருந்துப்பொருட்களை அனுப்புவதற்கு உதவினாரென இந்திய அரசால் சிறைவைக்கப்பட்டுப் பின்னர், சிறிலங்காவிற்கு நாடுகடத்தப்பட்டார்.

மா.க. ஈழவேந்தன் அவர்கள், 2004இல் தேசியப்பட்டியல் மூலம் தனக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பைச் சுமந்தவாறு, தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். தமிழ் மக்கள் தாயகமண்ணில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டுமென இறுதிமூச்சுவரை இவர் செயற்பட்டவராவார்.

மா.க. ஈழவேந்தன் அவர்கள் சிறிலங்கா அரசின் நெருக்கடிகள், உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாகத் தனது குடுப்பத்தினரைப் பிரிந்து, கனடாவில் தஞ்சமடைந்து, வயது மூப்படைந்தபோதும் சுதந்திரதாகத்தோடு தமிழீழ விடுதலையில் உறுதிதளராது தொடர்ந்தும் குரல்கொடுத்துவந்தவராவர்.

தமிழீழ மண்ணை ஆழமாக நேசித்து, அந்த மண் ஒரு சுதந்திர தேசமாக மலர்வதைக் காணத்துடித்து, அதனை அடைவதற்கு எமது விடுதலை இயக்கம் வரித்துக்கொண்ட போராட்டப்பாதையை முழுமையாக ஏற்று, இறுதிமூச்சுவரை செயற்பட்டவரை நாம் இன்று இழந்து நிற்கின்றோம். இவரது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், கனகசபாபதி ஈழவேந்தன் அவர்களின் விடுதலைப்பற்றிற்காகவும் விடுதலைக்காற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.