ரியாத் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றம் நிறைவு

24 0

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ஏப்ரல் 28-29ஆம் திகதிகளில் சவூதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களின் ஆதரவில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) சிறப்புக் கூட்டம், அதிகரித்து வரும் எல்லை தாண்டிய சவால்களை எதிர்கொள்வதற்கான ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் வளர்ச்சியினை உள்ளடக்கிய வாய்ப்புகளுக்கான தெளிவான பாதைகளை சமைத்து வெற்றிகரமாக முடிவுற்றது.

"உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆற்றல் & quot; என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இம்மன்றத்தில் முன்னணி அரசியல், பொருளாதார மற்றும் முக்கிய தொழில்நுட்ப பிரமுகர்கள் உள்ளடங்களாக 1,000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சுவிட்சர்லாந்தின் டாவோஸிற்கு வெளியே நடாத்தப்பட்ட ஒரு WEF நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களைக் கண்ட ஒரு முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.

இலங்கை சார்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் இச்சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இப்பயணத்தின் போது சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் பர்ஹான் உட்பட பல அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிகழ்வின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சவூதி அரேபியாவின் முதலீட்டு அமைச்சர் காலித் அல் பலிஹ் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது நீண்டகாலமாக உணரப்பட்ட தேவையாகவும் இரு நாடுகளிலும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவுவதாகவும் அமையும்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களின் சவூதியின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் பின் பாதில் அலி இப்ரஹிம் உடனான சந்திப்பின் போது இரு நாட்டுக்குமிடையாலான உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைக்கும் பகுதிகள் மற்றும் சமீபத்திய பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினர்.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த மற்றும் மந்த நிலையிலுள்ள நாடுகள் தொடர்பாக சவூதிஅரேபியா ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் இலங்கை பங்கேற்பதாகவும் வெளிவிவகாரஅமைச்சர் அலி சப்ரி அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முக்கியமாக பொருளாதார ரீதியான வளர்ச்சியில் மந்த நிலையில் உள்ள ஆசிய,ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி ஆராய்ச்சியியல் ஆகிய துறைகளில் பலமுன்முயற்சிகளைத் தொடங்குவதற்கு இந்தக் கூட்டம் சந்தர்பத்தை அமைத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்துடன் மூன்று முக்கிய ஒப்பந்தங்களை சவூதி அரேபியா மேற்கொண்டுள்ளது. பல நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் போலியோவை தடுக்கும் நோக்கத்துடன், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) மற்றும் சவூதியின் சுகாதார அமைச்சகம் ஆகியவை இணைந்து இவ்வொப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சவூதியின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் அலி இப்ராஹிம் கருத்துத் தெரிவிக்கையில், உலகம் வாய்ப்புகள் மற்றும் பொறுப்புக்களுக்கு மத்தியலான தடுமாற்ற நிலையல் உள்ளது என்றும், மேலும் ஒவ்வொரு நாடும் அதன் செல்வம் அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் உலகளாவிய பொருளாதாரத்தை செழிப்பானதாக உருவாக்க வேண்டியதன்அவசியத்தையும் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் ஆற்றல்  மாற்றத்தை ஆதரிப்பதற்குமான மூன்று முன்முயற்சிகளும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முக்கிய துறைகளில் முன்னணி சவூதி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக ஒரு முன்னோடியான முன்முயற்சித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விரிவான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உத்திகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கார்பன் சேமிப்பு மற்றும் பயன்பாடுகள் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் குறித்த அமர்வில்,எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான், சமமான ஆற்றல் மாற்றத்திற்கான தீர்வுகளை ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும், வரவிருக்கும் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையிலும் எரிசக்தி ஆற்றல் துறையில் மேம்பட்ட அமைப்புகளையும் திட்டங்களையும் உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

உலகளாவிய ஒத்துழைப்பு மேம்படுத்தல் தொடர்பான அதிகமான கலந்துரையாடல்கள் மற்றும் அமர்வுகள் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவூதியன் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல்-சௌத் அவர்கள் தலையமையில் இவ்வமர்வுகள் இடம்பெற்றதோடு, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் விரிவடைந்து வரும் மோதல்கள் உட்பட மிக முக்கியமான புவிசார் அரசியல் சவால்களை சமாளிப்பதற்கான ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் முக்கிய இடம் வகித்தது. இதே தலைப்பில் உரையாற்றிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆதெல் அல் ஜுபைர், நிலையான பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைய தெளிவான பாதையைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உலக பொருளாதார மன்றத் தலைவர் பொர்க் ப்ரென்டே இக்கூட்டம் பற்றி கருத்து தெரிவிக்கையில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு செயலர் டேவிட் கேமரூன் உள்ளிட்டமுக்கிய உலகத் தலைவர்களை ஈர்த்த முக்கியமான ஒரு கூட்டம் என்றார்.

இந்த நிகழ்வில் பல புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மாடர்னா (Moderna) தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல், புற்றுநோய்க்கான முதல் மருத்துவ தயாரிப்பிற்கான பணிகளை 2025 ஆம் ஆண்டாகும் போது தொடங்குவதற்கான நிறுவனத்தின் திட்டங்களை அறிவித்தார்.