ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு சவ்வு மாற்று அறுவை சிகிச்சை: தாயிடம் தானமாக பெற்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

22 0

கால் முட்டி சவ்வு பாதிக்கப்பட்ட ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு, அவரது தாயின் காலில் இருந்து சவ்வு பெறப்பட்டு வெற்றிகரமாக வைக்கப்பட்டது. சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி வெள்ளையப்பா – பரிமளா தம்பதியின் 14 வயது மகள் கனிஷா, 9-ம் வகுப்பு முடித்துவிட்டு 10-ம் வகுப்புக்கு செல்கிறார். ஜூனியர் பிரிவில் ஈட்டி எறிதலில் மாநில வீராங்கனையான இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.சில மாதங்களுக்கு முன்பு பயிற்சியின்போது, இடது கால் முட்டியில் வலி ஏற்பட்டதால், ஓய்வெடுத்து வந்தார். மீண்டும் பயிற்சி தொடங்கியபோது, கடுமையான வலி ஏற்பட்டு கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவரது கால் முட்டியில் 3 சவ்வுகள் கிழிந்திருப்பது தெரியவந்தது. இதற்கான சிகிச்சைக்கு ரூ.2.45 லட்சம் செலவாகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர் ஜி.லியோனார்டு பொன்ராஜ் குறித்து கனிஷா கேள்விப்பட்டார்.

அவர், சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் விளையாட்டு மருத்துவத் துறை இயக்குநர் மற்றும் மூட்டு தோள்பட்டை சீரமைப்பு நிபுணர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கனிஷா அணுகினார்.

வீராங்கனையை பரிசோதித்த மருத்துவர், சவ்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். தான் பணியாற்றும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கனிஷாவை அனுமதித்தார். நேற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

கனிஷாவின் இடது கால் முட்டியில் சிறு துளையிட்டு, 2 சவ்வுகளை, தையல் மூலம் சரிசெய்தார். 3-வது சவ்வை தையல் மூலம் சரிசெய்ய முடியாததால், கனிஷாவின் தாய் பரிமளாவின் வலது காலின் முட்டிக்கும் பாதத்துக்கும் இடையே சிறு துளையிட்டு ஒரு சவ்வை எடுத்து, கனிஷாவுக்கு பொருத்தினார். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

சிகிச்சை ஏற்பாடுகளை மருத்துவமனை இயக்குநர் ஆர்.விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் ஆகியோர் செய்திருந்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு, நலமுடன் இருக்கும் கனிஷா, விரைவில் ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் லியோனார்டு பொன்ராஜ் கூறியதாவது: விளையாட்டு வீரர்களின் சவ்வு கிழிந்தால், வழக்கமாக அவர்களது உடலில் இருந்தே நல்ல சவ்வு எடுத்து வைக்கப்படும். கனிஷா 14 வயது சிறுமி என்பதால், அவரது சவ்வு, தசை ஆகியவை முதிர்ச்சி அடையவில்லை.

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து ஏற்கெனவே பெறப்பட்டு பதப்படுத்தி வைக்கப்பட்ட சவ்வு நீண்ட நாள் தாங்காது. இதனால், சிறுமியின் பெற்றோரிடம் இருந்து சவ்வு எடுத்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

தந்தைக்கு 62 வயது ஆகிவிட்டதால், அவரிடம் இருந்து எடுக்கவில்லை. இதையடுத்து, 43 வயதாகும் தாயின் வலது காலில் இருந்து சவ்வு எடுத்து மகளுக்கு வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை இங்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.