இலக்கை நிர்ணயம் செய்து கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்

16 0

இலக்கை நிர்ணயம் செய்து கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என பணிஓய்வு பெறவுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் அறிவுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. சந்திரசேகரன் வரும் மே 30-ம் தேதியுடன் பணி ஓய்வுபெறுகிறார். மே 1-ம் தேதி முதல்சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால் அவருக்கான பணி ஓய்வுபிரிவு உபசார விழா நேற்றுஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பணி ஓய்வு பெறவுள்ளநீதிபதி ஜி. சந்திரசேகரன் 4ஆண்டுகளுக்கும் குறைவானகாலமே பணியாற்றியுள்ளார் என்றாலும் 17 ஆயிரத்துக்கும்மேற்பட்ட வழக்குகளை முடித்துவைத்துள்ளார் என்றார்.

அதையடுத்து நீதிபதி ஜி. சந்திரசேகரன் ஏற்புரையாற்றி பேசுகையில், ‘‘ உயர் நீதிமன்ற நீதிபதியாக வேண்டும் என்கிற ஆசை பலருக்கு இருந்தாலும் ஒரு சிலருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. நான் உயர் நீதிமன்ற நீதிபதியாக எனது பணியை மனநிறைவுடன் சிறப்பாக செய்து பெருமையுடன் பணி ஓய்வு பெறவுள்ளேன்.

தமிழ் வழியில் பள்ளிக்கல்வியை முடித்து இருந்தாலும் இலக்கை நிர்ணயம் செய்து கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். நினைத்த இடத்தை அடைய முடியும் என்பதை இளம்வழக்கறிஞர்கள் உணர வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி. கங்காபுர்வாலா வரும் மே 23-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.